கம்பம், ஜூலை 23: தேசிய குழந்தைகளுக்கு நடத்தப்படும் அறிவியல் மாநாட்டிற்கு தலைப்புகளை அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.
குழந்தைகளிடையே இயல்பாக உள்ள ஆய்வு மனப்பான்மையையும், படைப்புத் திறனையும் வெளிகொண்டு வரும் விதமாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு 1993-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை, தேசிய தகவல் மற்றும் அறிவியல் தொழில்நுட்பப் பரிமாற்றக்குழு ஆகியவற்றோடு இணைந்து தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இம்மாநாட்டை நடத்தி வருகிறது.
இந்த 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 10 முதல் 13 வயதுள்ள குழந்தைகளும், 14 முதல் 17 வயதுள்ள பள்ளிக் குழந்தைகள் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக் கட்டுரைகளைத் தயார் செய்யலாம். இதில் இந்தாண்டு கருப்பொருளாக நிலவளம்-வளத்திற்காகப் பயன்படுத்துவோம், வருங்காலத்திற்காகவும் பாதுகாப்போம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உபதலைப்பாக, நிலத்தின் செயல்பாடுகள், நிலத்தின் தரம், நிலத்தில் மனிதனால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள், நிலவளத்தின் நிலைத்தகு பயன்பாடுகள், நிலத்தை பயன்படுத்துவது பற்றிய சமூக அறிவு ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பெயர் பதிவு ஆகஸ்ட் முதல் வாரத்தில் துவங்கும். பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டுமே மாநாட்டில் கலந்து கொள்ள முடியும். மாவட்ட அளவில் அக்டோபரிலும், மாநில அளவில் நவம்பரில் கோவையிலும், தேசிய அளவில் டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலத்திலும் மாநாடு நடைபெற உள்ளது.
மாநாட்டில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த ஆய்வு புரிந்தவருக்கு இளம் விஞ்ஞானி விருது குடியரசு தலைவரால் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், ஆசிரியருமான எஸ்.சுந்தர் கூறியதாவது:
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கடந்தாண்டு தேனி, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 2 மாணவர்கள் இளம் விஞ்ஞானி விருதைப் பெற்றனர். இந்தாண்டு அதிக அளவில் மாணவர்கள் பங்கேற்கும் விதத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வழிகாட்டிப் புத்தகங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
நன்றி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக