கோவை, அக். 22: கோவையில் மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச. 3 முதல் 5ம் தேதி வரை கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு சார்பில் ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தப்படுகிறது. பள்ளி மாணவர்கள் குழுக்களாக அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளை மாவட்ட வாரியாக சமர்ப்பிப்பார்கள். அதிலிருந்து மாநில மாநாட்டுக்கு ஆய்வுக் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, மாநில வாரியாக ஆய்வுக் கட்டுரைகள், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும்.
இந்தாண்டு 18-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் டிச.26 முதல் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம் மாநாட்டின் ஆய்வுத் தலைப்பாக "நிலவளம்'- வளமைக்காக பயன்படுத்துவோம், வரும் தலைமுறைக்காகவும் பாதுகாப்போம் என்ற கருப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக, நாடு முழுவதும் குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மாநில மாநாடு டிச. 3-ம் முதல் 5-ம் தேதி வரை கோவை அரசூர் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டின் வரவேற்புக் குழு மற்றும் ஆலோசனைக் குழுக் கூட்டம் கே.பி.ஆர். பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதற்கு, கே.பி.ஆர். குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் கே.பி.டி.சிகாமணி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கோவை மாவட்டச் செயலர் எம்.எஸ்.பாதுசா பேசியது: தமிழ்நாடு முழுவதும் நவம்பர் மாதத்தில் நடைபெறும் குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாட்டில், 2000 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதில், 10 ஆயிரம் மாணவர்களும் 2 ஆயிரம் வழிகாட்டி ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்ஐ பள்ளிகள் என 1500 பள்ளிகள் இதில் பங்கேற்கின்றன. இதற்காக, 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மாவட்ட மாநாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் 160 முதல் 200 வரையிலான ஆய்வுக் கட்டுரைகள் கோவையில் நடக்கும் மாநில மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும். மாநில மாநாட்டில், 1,200 மாணவர்கள், 200 வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். 12 அரங்குகளில் ஆய்வுக் கட்டுரைள் சமர்ப்பிக்கப்படும். அதிலிருந்து, 30 ஆய்வுக் கட்டுரைகள் தேசிய மாநாட்டிற்காக தேர்வு செய்யப்படும்.
மாநில மாநாட்டில் பங்கேற்கும் மாணவர்களுக்காக, கணித விளையாட்டுகள், கணக்கும் இனிக்கும், எளிய அறிவியல் பரிசோதனைகள் என 9 அரங்குகள் அமைக்கப்படும். அறிவியலாளர்களுடன் மாணவர்கள் சந்திப்பும் நடைபெறும்.
வழிகாட்டி ஆசிரியர்களுக்கு, கற்றல் கற்பித்தல் குறித்த அரங்குகள், கற்பித்தல் மாற்று வடிவங்கள் தொடர்பான அரங்குகள் அமைக்கப்படும். இது தவிர, கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பார்வையிட இம்மாநாட்டில் அறிவியல் போஸ்டர் கண்காட்சி உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
மாநாட்டையொட்டி, கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டையில் பள்ளி,கல்லூரி, தொழிற் பயிற்சிப் பள்ளி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்குகளும் நடத்தப்படவுள்ளது என்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில், கே.பி.ஆர். பொறியியல் கல்லூரி முதன்மை செயல் அலுவலர் டி.தனபால், முதல்வர் கே.பி.அருள்ஸ்ரீ, அண்ணா பல்கலைக்கழக மேலாண்மைத்துறை பேராசிரியர் விக்கரமன், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் என்.மாதவன், பொருளாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், பொதுச்செயலர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பெ.நடராஜன், மாநில செயலர் எஸ்.சுப்பிரமணி, மாணவர்களின் ஆய்வுக்கு வழிகாட்டும் ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
நன்றி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக