தினமணி
22 Oct 2010 01:17:58 PM IST
காரைக்கால், அக். 21: காரைக்காலில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் தயார் செய்திருந்த மண் வளம் குறித்த ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது.
தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ் 2010 என்ற மாவட்ட அளவிலான அறிவியல் மாநாடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. மாநாட்டை முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். தர்மராஜ் தொடக்கிவைத்தார். இந்த மாநாட்டில் மண்ணின் தரம், எந்தெந்த தாவரம் பயிரிட முடியும் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களுடன் கட்டுரைகளை ஆய்வுக் குழுவினரிடம் மாணவர்கள் அளித்தனர். காரைக்காலில் 30 பள்ளிகளில் இருந்து சுமார் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள விவரங்களை விளக்கினர். முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். தர்மராஜ் பேசும்போது, இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அடுத்த மாதம் புதுச்சேரியில் நடைபெறவுள்ள மாநில அளவிலான மாநாட்டுக்கு அனுப்பப்படும். மாநில அளவில் தேர்வு செய்யப்படுவோர் சென்னையில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மாநாட்டில் பங்கேற்பர். இவர்களுக்கு இளம் விஞ்ஞானி உள்ளிட்ட பல விருதுகளும், வேலைவாய்ப்புக்குரிய முன்னுரிமையும் கிடைக்கும் என்றார்.
மாநாட்டில் பேராசிரியர் சம்பந்தன், விஸ்வேஸ்வரமூர்த்தி, சிஇஆர்பி அமைப்பின் தலைவர் ரகுநாத், விஜயமூர்த்தி, சுதர்ஸன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக