காங்கயம்: தேசிய குழந்தைகள் மாநாட்டில், மாவட்ட அளவில் நடந்த ஆய்வுக்கட்டுரை போட்டியில், சிவன்மலை ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், விஜயமங்கலம் சசூரி பொறியியல் கல்லூரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது. திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட பள்ளிகளில் இருந்து 89 அறிவியல் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சிவன்மலை ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் "காங்கயம் பகுதியில் மண் வளம் குறைவதற்கான காரணங்களும், அவற்றை மேம்படுத்துதலும்' என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரை, மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஆய்வில், "மண் வளம் மாசு அடைவதற்கு முக்கிய காரணங்களான நிலம், நீர் மற்றும் காற்று மாசை கட்டுப்படுத்தும் முறை, மண் வளத்தை மேம்படுத்துவதற்கு இயற்கை உரங்களான உயிர் உரங்கள், பண்ணை கழிவு, மண்புழு உரம் போன்றவற்றை பயன்படுத்துவதால் மண்வளம் மேம் படுத்தப்படுகிறது' என தீர்வு அளிக்கப்பட்டது. கோவையில் நடைபெற உள்ள மாநில அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு கட்டுரை வழிகாட்டி ஆசிரியர்களான சின்னதுரை, உஷாராணி மற்றும் ஆய்வுக்குழு மாணவியர் நித்யா, வாசுகி, ராகதீபிகா, மாணவர்கள் ஹரிகிருஷ்ணன் மற்றும் சண்முகவேலனை, பள்ளி தலைவர் ராமசாமி, தாளாளர் பழனிச்சாமி, பள்ளி முதல்வர் சாவித்திரி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.
நன்றி: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக